சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/318566395540565/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.
பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
பாடுபொருள்: இறைவன், இயற்கை, உழவு, கணினி, காதல்
பாவகை: நேரிசைச் சிந்தியல் வெண்பா
மேற்காணும் ஐந்து பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக
.. மொத்தம் ஐந்து (5)
.. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.
தொகுப்பு
17/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.
*****
அடியேன் பங்காக
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவன்
தேரேறி தெய்வம் தெருவில் வலம்வர
ஊரொன்று சேர்நாளாய் உற்சவம் - வேரோடித்
தீரா வினைகளுக்குத் தீர்வு.
இயற்கை (ஹைக்கூ பாணி)
இழைவண்ணம் எங்கும் இயற்கையில். நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம். - குழையும்
மழைத்துளியில் சிக்கும் மலை.
உழவு
காராடும் வானம் கனிந்தே பொழிந்தால்தான்
ஏராடும் மண்ணில் எருதுகளின் - சீரோடிப்
போராடும் வாழ்வில் பொழில்.
கணினி
கணினியைப் போற்று கணினியைப் போற்று
பணிகளைச் செய்திடும் பாங்கில் - அணியாம்
மணித்துளியில் வேலையாம் மாண்பு.
காதல்
கண்ணிரண்டும் பேசவெழும் காதலில் பெற்றவர்
எண்ணம் அறிந்தே இறங்குவாய் - பெண்ணேவுன்
திண்ணத்தில் இல்லையோர் தீர்வு.
--குருநாதன் ரமணி
★★★★★
No comments:
Post a Comment