Sunday, March 31, 2019

பயிலிழை சிவெ.03. தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.03. தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கவிஞர் அரங்க இரகுநாதன்
காதல்
காதல் கனிந்து கருத்தில் நிலைத்திடச் 
சாதல் அகந்தை; சரிநிகர் சிந்தனை; 
மோதல் இலாத முனைப்பு. ... 1

வானம்
வருந்தும் உளத்தை வருடும் வகையில் 
மருந்தாய் இருந்து மகிழ்வுறச் செய்தே 
விருந்தாய் விளங்கும் வியன். ... 2

சுற்றம்
உற்றவர் சுற்றமும் ஒல்கிடாப் பற்றுடைப் 
பெற்றவர் நண்பரும் பேறெனத் தேரிடின் 
பெற்றியே வையப் பிறப்பு. ... 3

நட்பு
நயந்துநாம் பேண நலந்தரும் நட்பு 
பயன்தரும் சுல்வி பரிவளிக்கும் சுற்றம் 
வயப்படும் வாழ்வில் வளம். ... 4

கற்பு
கற்புடைப் பெண்டிர் களிதரும் மக்களும்
பொற்புடைச் சான்றோர் பொறுப்புடன் ஆள்வோரும் 
கற்படை ஒப்பர் கருது. ... 5

★★★
பாவலர் சீனி பழனி
புயல்
காற்றும் மழையும் கடிதென வந்திடக்
கூற்றுவ னாகக் குடிசை மரங்களும்
சீற்றத்தில் சிக்கின காண். ... 1

வறுமை
நதியில் இருந்தது நாளும் குறையா
நிதிதரு மீனுடன் நித்திலக் குப்பை
பதியில் வறுமை பகர். ... 2

கணினி.
காலக் கணினி கனவெனக் கைகளில்
நூலும் நொடியில் நுவலாக் கனிவுடன்
வேலை எளிதே இனி. ... 3

எழுத்தாணி. 
ஓலைச் சுவடி ஒருகை சுமந்திட
ஆலைக் கரும்பாய் மறுகையி லேந்துவ
காலைக் கதிரெழுத்தா ணி. ... 4

வீடு
அன்னைமகிழ் தந்தையுடன் ஆசைமிகு பாசமழை
கன்ன(ல்)மொழி கைப்பிள்ளை காதல் மடவார்கள்
என்னவென வேண்டுமகிழ் வீடு. ... 5

★★★
கவிஞர் திசேசு 

பேரறியாப் பித்தனெனைப் பேரருளால் பேசவைத்தே
ஊரறியச் செய்துவிட்ட ஓங்கார மீனாவுன்
சீரறியப் பாடேனோ நான். ... 1

நன்றியிலா நண்பர்கள் நல்லோர்போல் கூடிடுவார்
கொன்றிடுவார் வார்த்தைகளால் கோமகனாய் இங்கிவரை
மன்றங்கள் வாழ்த்துவதேன் சொல். ... 2

சோலைக்குள் வந்தநிலா சொன்னதெலாம் கேட்டபின்னர்
பாலைக்குள் நீரூற்றுப் போலாகிப் பாடலானேன்
காலைக்குள் கண்ட கனா. ... 3

வயல்வெளியில் பாடுபட்டும் வாட்டமுறும் கையில்
வயப்படாமல் வாழ்வின் வசந்தங்கள் போகத்
தயக்கமேன் வெல்வோம் தடை. ... 4

தூக்கமின்றிச் சோம்பலின்றி ஓடுகின்ற சிற்றெறும்பை
ஏக்கமுடன் பார்த்துமனம் எண்ணுவதை சொல்லுடுத்திப்
பாக்களாக்கிப் பாடாதார் யார்? ... 5

கணினியின் மூளையைக் கண்டுவக்கும் மாந்தர்
கணினியைக் கண்டுணர்ந்த மூளைபடைத் தானை
கணியாரோ மேலென் றதற்கு. ... 6

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உணவு
வற்றல் குழம்புடன் வட்டில் சுடுசோறு
குற்றிக் கரம்பிசைந்தே கொண்டோர் கவளத்தைப்
பற்சுவைக்கத் தீரும் பசி.

கவிதை
எண்ணம் மொழியாக ஏதோ குறைதெரியும்
வண்ணம் ஒலியும் வளம்பொருளும் கொண்டாலும்
நண்ணியது காணா நலிவு.

காலம்
நேற்றெல்லம் உள்ளே நினைவாகும் இன்றெனத்
தேற்றுவதும் போமே தெளியாதே நாளையும்
காற்றாய்ப் பறந்திடும் கால்.

குடும்பம்
கூட்டுக் குடும்பம் குலைத்தே இருவரும்தம்
வீட்டுக் குடும்பமாய் வெல்லப் பணத்தாசை
ஆட்டு குடும்பமென் றாம்.

பேச்சு
மூச்சைத் தடைசெய் மொழியதுவே வாயுறும்
பேச்சாகும் அஃது பெருகினால் உள்ளத்தின் 
வீச்சைக் குறைக்கும் விழல்.

★★★★★

பயிலிழை சிவெ.03. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தனிச்சொல் இன்றி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.03. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தனிச்சொல் இன்றி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/327682967962241/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.

பயிலிழை சிவெ.03. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தனிச்சொல் இன்றி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: இன்னிசைச் சிந்தியல் வெண்பா

விரும்பும் பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக, புதிதாக, 
.. மொத்தம் ஐந்து (5)
.. தனிச்சொல் இல்லாத
.. ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
30/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உணவு
வற்றல் குழம்புடன் வட்டில் சுடுசோறு
குற்றிக் கரம்பிசைந்தே கொண்டோர் கவளத்தைப்
பற்சுவைக்கத் தீரும் பசி.

கவிதை
எண்ணம் மொழியாக ஏதோ குறைதெரியும்
வண்ணம் ஒலியும் வளம்பொருளும் கொண்டாலும்
நண்ணியது காணா நலிவு.

காலம்
நேற்றெல்லம் உள்ளே நினைவாகும் இன்றெனத்
தேற்றுவதும் போமே தெளியாதே நாளையும்
காற்றாய்ப் பறந்திடும் கால்.

குடும்பம்
கூட்டுக் குடும்பம் குலைத்தே இருவரும்தம்
வீட்டுக் குடும்பமாய் வெல்லப் பணத்தாசை
ஆட்டு குடும்பமென் றாம்.

பேச்சு
மூச்சைத் தடைசெய் மொழியதுவே வாயுறும்
பேச்சாகும் அஃது பெருகினால் உள்ளத்தின் 
வீச்சைக் குறைக்கும் விழல்.

--குருநாதன் ரமணி

★★★★★

பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

கவிஞர் இராமசாமி வெங்கடராமன் 
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
பித்தன் சுடலையாடி பிஞ்ஞகன் ஆலுண்டோன்
அத்தனென பக்தர்தம் அன்பினால் - சித்தத்தில்
சீவனெனத் தங்கும் சிவன். ... 1

இயற்கை
கருமேகம் சூழக் களிப்பு மிகுந்து
பெருகி மழைவரல் பேறாய்க் - கருதி
குடையெடுக்கக் கூம்பும் குளிர். ... 2

உழவர்
பெய்தாலும் பொய்த்தாலும் பேரழி வில்வாழ்வு
நெய்தலும் பாலையாயின் நெஞ்சத்தில் - குய்யமின்றி
வெள்ளை மனத்துடன் மெய். ... 3
(குய்யம் = வஞ்சம்)

கணினி
விழிபிதுங்கிப் போனேன் விபரமறி யாது
இழிவாய் உணர்ந்து இதயம் - கிழியக்
கணினிதானே காரணமாச் சே! ... 4

காதல்
இருமனம் ஒன்றி இருப்பதே காதல்
ஒருமனம் சற்றே ஒதுங்கி - இருப்பின்
துவளும் மனத்தில் துயர். ... 5

★★★
கவிஞர் திசேசு
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவி
கையில் கிளியோடு கண்ணில் ஒளியோடு
வையம் புரந்திடும் மீனம்மா- மைந்தர்க்குத்
தாயன்றித் தக்கதுணை யார்? ... 1

உழவு
அருகியும் துன்பம் பெருகியும் துன்பம்
பெருந்துயர் பெற்றனர் நீரால் - முருகா
விவசாயம் ஆவதோ வீண். ... 2

இயற்கை
பிள்ளையணில் ஓடுமதன் பின்தொடர்ந்து அன்னையணில்
துள்ளியோட அங்குமிங்கும் தொங்குகிளை - கொள்ளையெழில்
கொண்டதெங்கள் கொய்யா மரம். ... 3

கணினி
மடியில் கிடக்கும் மனதில் நினைக்க
நொடியில் அளிக்கும் நியமம் - கடவுளாய்
மாறுதோ மாக்கணினி தான். ... 4

காதல்
தஞ்சமென வந்தயென்றன் தங்கமயில் நின்னைநானும்
கொஞ்சுதற்கும் என்னதடை கோமளமே - அஞசுகத்தாய்க்
காலடியில் அச்சமில்லை காண். ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறை
அணுக்கத் திருந்தே அவன்தாள் பணிய 
துணுக்குற் றொழியும் துயர்கள் - பணுகந்து 
பாவலர் போற்றும் பரம். ... 1

நெருங்க நெருங்கநம் நெஞ்சம் நெகிழும் 
மருங்கில் மலராய் மறுவில் - தரங்கம் 
உதித்த தளிராம் உயர்வு. ... 2

சுரும்பாய் இசைக்கும் சுவையார் சுரங்கள் 
அரும்பும் அனையவள் அந்தாள் - துரும்பாய் 
இகத்தே இருத்தலெனக் கின்பு. ... 3

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
கண்ணால் கடவுளைக் கற்சிலை யிற்கண்டு
பண்ணால் துதித்துப் பரவுவோம் - எண்ணம்
அகன்றே மனங்கொள்ளும் அன்பு.

இயற்கை
வான்மழை பெய்ய வளம்சூழ் மரத்திலே
தேன்மொழிப் பண்ணாய்ச் செவியுறும் - கான்பொழில்
மலர்களில் தோயும் மனம்.
[கான் = மணம்]

உழவு
நீர்க்கால் நிலைத்தே நிறைத்த வயலில்
ஏர்க்கால் ஓட விளைநிலம் - தேர்க்கால்
விரைசாலை யாகும் வெறுப்பு.
[தேர் = இந்நாளைய மோட்டார் வண்டிகள்]

கணினி
எழுத்தெல்லாம் எண்ணாக்கி எண்ணியதைச் செய்யும்
விழுமப் பொறியாம் வியப்பு - பழுதுற்றால்
பதைபதைத்தே நிற்கும் பணி.

காதல்
அன்பே அடித்தளமாய்க் காதலாம் சூழலில்
உன்னத மான உலகமை - நன்மையாம்
காண்டேகர் சொன்ன கருத்து.

[வி.எஸ்.காண்டேகர்: ஞானபீட விருது பெற்ற 
.. புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். 
.. இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுத்
.. தமிழ்க் கதையுலகில் விரும்பிப்
.. படிக்கப்பட்டன.]

★★★★★

பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/324583138272224/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.

பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: நேரிசைச் சிந்தியல் வெண்பா

விரும்பும் பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக
.. மொத்தம் ஐந்து (5)
.. இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
23/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
கண்ணால் கடவுளைக் கற்சிலை யிற்கண்டு
பண்ணால் துதித்துப் பரவுவோம் - எண்ணம்
அகன்றே மனங்கொள்ளும் அன்பு.

இயற்கை
வான்மழை பெய்ய வளம்சூழ் மரத்திலே
தேன்மொழிப் பண்ணாய்ச் செவியுறும் - கான்பொழில்
மலர்களில் தோயும் மனம்.
[கான் = மணம்]

உழவு
நீர்க்கால் நிலைத்தே நிறைத்த வயலில்
ஏர்க்கால் ஓட விளைநிலம் - தேர்க்கால்
விரைசாலை யாகும் வெறுப்பு.
[தேர் = இந்நாளைய மோட்டார் வண்டிகள்]

கணினி
எழுத்தெல்லாம் எண்ணாக்கி எண்ணியதைச் செய்யும்
விழுமப் பொறியாம் வியப்பு - பழுதுற்றால்
பதைபதைத்தே நிற்கும் பணி.

காதல்
அன்பே அடித்தளமாய்க் காதலாம் சூழலில்
உன்னத மான உலகமை - நன்மையாம்
காண்டேகர் சொன்ன கருத்து.

[வி.எஸ்.காண்டேகர்: ஞானபீட விருது பெற்ற 
.. புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். 
.. இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுத்
.. தமிழ்க் கதையுலகில் விரும்பிப்
.. படிக்கப்பட்டன.]

--குருநாதன் ரமணி

★★★★★

பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/324739411589930/
பாவலர் சீனி பழனி
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

மழைக்காள மேகம் மலையிடையே தூறல்
நிழலில்லாத் துன்னிருள் வானில் – தழலில்
இழையிடி ஏந்திழை ஏர். ... 1

ஐப்பசி மாதம் அடைமழைக் காலமென
உப்பும் உணவும் உரியிடை – வைப்பதும்
தப்பா வழக்க மது. ... 2

நனவில் கனவென நாள்மழை மேகம்
தினமும் இரவினில் திங்கள் – மனமே
வனமும் அழகே பழகு. ... 3

ஊழலில் மன்னவன் உன்மத்தன் மக்களே
கேழலும் தெய்வமே கீழ்களின் – நீழலே
ஏழையின் ஏற்றமோ பாழ். ... 4

வேர்விடும் மாமரம் வெந்தணல் கைக்கிளை
யார்முகம் என்றிலை தின்றிடும் – கூர்மனம்
பார்வையில் பாவையோ நோய். ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

கேசவன் மேன்மைகள் தேசிகர் பேசினார் 
ஆசுடைக் கீழ்மையன் ஆக்கினேன் - நீசன்யான்
தேசுடை ஆசான்தாள் தூசு. ... 1

செழித்துக் கிளைத்திடும் செந்தமிழ்ச் சொற்கள் 
கொழித்து மிளிர்ந்திடும் கொப்பு - விழித்தேன்
இழிந்தேன் விழுவேன் இணை.. ... 2

சந்திர சூர்யரொடு செந்தீமுக் கண்ணாக 
நந்தாபம் நீக்கிடுவான் நான்மறை - அந்தமாம் 
சிம்ஹதாபிச் செம்பொருளே சீர். ... 3

கண்ணெனக் கொள்வாய் கருமமே கொள்ளாக்கால் 
எண்ணிலாத் துன்பே இலக்கெனப் - பன்னிடும்
எண்ணிலா நூற்பொருள் ஏல். ... 4

சுரங்களின் சேர்க்கையாம் சூழிருள் போது
அரனார் கழுத்தில் அணிசெய் - நிரலாம் 
இராக இராராகம் கம். ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
எந்த நிலையிலும் இன்னுயிராய்த் தானிருந்து
நிந்தனை செய்வோர்க்கும் நீராக - வந்தருளி
விந்தைகள் செய்யு மிறை. ... 1

இயற்கை
காடுமே டெல்லாமும் கட்டாந் தரையாக்கி
வீடுயர்த்தி வானையே வீணாகச் - சாடுவது
கேடுவரச் செய்யுமே கேள். ... 2

உழவு
உழவுத் தொழிலும் உயர்வுற வேண்டி
கழனிகள் எல்லாம் கனியாய்ச் - செழிக்க
அழலாடி செய்வான் அருள். ... 3
(அழலாடி= சிவன்)

கணினி
விண்ணையும் மண்ணையும் விண்டா லிணைத்திடும்
மண்ணில் மயங்கிடும் மாந்தரின் - கண்களைக்
கண்ணியாய்க் கட்டும் பொறி. ... 4

காதல்
காதலுக்குத் தூண்டும் கயவர் தொடர்புகள்
சாத மறிந்தபின் தாவினால் - சாதலால்
பேதலிப்போ உற்றவர் பெட்பு. ... 5

[சாதம் = உண்மை; தா = வருத்தம்; பெட்பு  = ஆசை\

★★★
கவிஞர் திசேசு
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவி
வக்கிரங்கள் பல்கி வகைவகையாய் நாட்டினில்
அக்கிரமத் தோரணங்கள் ஆடுதம்மா - மிக்குயர்ந்து
தக்கோர்கள் வாழபலம் தா. ... 1

இயற்கை
மந்தியினம் குட்டியுடன் மாமரத்தில் தாவிநிதம்
வந்துவந்து செங்கனியில் வாய்வைத்துச் - சொந்தமுடன்
பந்தியிடும் காட்சிசுகந் தான். ... 2

உழவு
நீர்நிலையில் செங்கற்கள் நேர்ந்துகுடி ஏறுவதால்
ஏர்பூட்டிச் செல்வதற்கும் ஏதுநீரே - பார்மீதில்
கார்மேகக் கண்ணே கதி. ... 3

கணினி
எல்லாமே செய்யுமிது இம்மென்னும் முன்னாலே
நல்லோர்கை தீபமெனும் நற்கணினி - வல்லோர்க்கு
வல்லதாக வாய்த்த தது. ... 4

காதல்
சந்தனத்தில் வார்த்தெடுத்த சல்லாபச் சோலையவள்
எந்தேகக் கூட்டிலுறை ஏந்திழையாள் - வந்ததினால்
மந்தன்நான் ஆனேன் மகான். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
தேரேறி தெய்வம் தெருவில் வலம்வர
ஊரொன்று சேர்நாளாய் உற்சவம் - வேரோடித்
தீரா வினைகளுக்குத் தீர்வு.

இயற்கை (ஹைக்கூ பாணி)
இழைவண்ணம் எங்கும் இயற்கையில். நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம். - குழையும்
மழைத்துளியில் சிக்கும் மலை.

உழவு
காராடும் வானம் கனிந்தே பொழிந்தால்தான்
ஏராடும் மண்ணில் எருதுகளின் - சீரோடிப்
போராடும் வாழ்வில் பொழில்.

கணினி
கணினியைப் போற்று கணினியைப் போற்று
பணிகளைச் செய்திடும் பாங்கில் - அணியாம்
மணித்துளியில் வேலையாம் மாண்பு.

காதல்
கண்ணிரண்டும் பேசவெழும் காதலில் பெற்றவர்
எண்ணம் அறிந்தே இறங்குவாய் - பெண்ணேவுன்
திண்ணத்தில் இல்லையோர் தீர்வு.

★★★★★

பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/318566395540565/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.

பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
பாடுபொருள்: இறைவன், இயற்கை, உழவு, கணினி, காதல்
பாவகை: நேரிசைச் சிந்தியல் வெண்பா

மேற்காணும் ஐந்து பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக
.. மொத்தம் ஐந்து (5)
.. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
17/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
தேரேறி தெய்வம் தெருவில் வலம்வர
ஊரொன்று சேர்நாளாய் உற்சவம் - வேரோடித்
தீரா வினைகளுக்குத் தீர்வு.

இயற்கை (ஹைக்கூ பாணி)
இழைவண்ணம் எங்கும் இயற்கையில். நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம். - குழையும்
மழைத்துளியில் சிக்கும் மலை.

உழவு
காராடும் வானம் கனிந்தே பொழிந்தால்தான்
ஏராடும் மண்ணில் எருதுகளின் - சீரோடிப்
போராடும் வாழ்வில் பொழில்.

கணினி
கணினியைப் போற்று கணினியைப் போற்று
பணிகளைச் செய்திடும் பாங்கில் - அணியாம்
மணித்துளியில் வேலையாம் மாண்பு.

காதல்
கண்ணிரண்டும் பேசவெழும் காதலில் பெற்றவர்
எண்ணம் அறிந்தே இறங்குவாய் - பெண்ணேவுன்
திண்ணத்தில் இல்லையோர் தீர்வு.

--குருநாதன் ரமணி

★★★★★

Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/333937354003469/
கவிஞர் அரங்க இரகுநாதன்
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

செய்யென்றெண் செஞ்சொல்லெண் பொற்பொன்றெண் மெய்யொன்றெண் 
பொய்ச்சொல்லென் வெஞ்சொல்லென் எண். ... 1

எண்ணுங்கள் நம்வாழ்வின் துன்பங்கள் வெல்லுஞ்சொல் 
திண்ணம்நம் கண்ணன்தான் தேர். ... 2

வண்டொக்கும் பூச்சிக்கோர் வண்ணத்தைத் தந்தின்பம் 
மண்ணுக்குக் கூட்டும்வண் மால். ... 3

விண்ணுக்கும் மண்ணுக்கும் விட்டுய்வைத் தந்தின்பப் 
பண்ணாக்கம் செய்கின்றான் பார். ... 4

பற்றற்றான் பற்றும்தாள் பற்றென்றார் மற்றெல்லாம்
பற்றில்லாச் சுற்றங்கள் தான். ... 5

கற்பென்னும் திண்மைக்கோர் காப்பென்றும் தந்திட்டார் 
பொற்பென்றும் போற்றல்நன் றாம். ... 6

★★★
கவிஞர் திசேசு 
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

நின்றென்றும் காப்பாற்றும் மெய்யன்பர் தம்மில்லம்
குன்றொன்றும் கந்தப்பன் வேல். ... 1

பொட்டிட்டுச் சொல்லெல்லாம் பூங்காற்றுப் போற்கொஞ்சித்
தொட்டென்றன் பாட்டுக்குள் சீர். ... 2

பெண்டாட்டம் போட்டார்தம் கொண்டாட்டம் போய்முற்றித்
திண்டாட்டம் வந்தூட்டும் காண். ... 3

மூப்புற்றோர் நோய்கொள்ளச் சொந்தங்கள் வஞ்சித்தால்
தீப்புண்ணில் வேல்பாய்தல் போல். ... 4

யாப்பொன்றும் பாக்கள்தான் தேன்சொட்டத் தித்திக்கும்
காப்பிட்டால் தப்பென்பார் யார். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

இறைவன்
எண்ணத்தில் நின்றாள்வார் துன்பத்தைக் கொண்டாள்வார்
கண்ணுக்குள் கால்வைத்தோம் காண். ... 1

கல்லுக்குள் மண்ணுக்குள் காட்டுக்குள் வீட்டுக்குள்
சொல்லுக்குள் நின்றாள்வார் யார்? ... 2

காளி
பொல்லாப்பெண் நின்றாள்வாள் துல்லம்செய் பெண்ணாள்காண்
தில்லம்கொள் தெய்வத்தாய் தேர். ... 3
[துல்லம் = பேரொலி, தில்லம் = காடு]

மின்சாரம்
மின்னல்கண் பொன்தேட்டில் மின்சத்தைக் கண்டுற்றார்
நன்றென்றோம் கொண்டாள்வோம் நாம். ... 4

செல்வம்
இக்கட்டில் திக்கற்றார் நெக்குண்டார் துன்புற்றார்
சிக்குண்டார் செல்வத்தின் சீர்! ... 5

சமையல்
உப்பென்றேன் சாம்பார்தான் கல்லென்றேன் சாப்பாட்டில்!
தப்பித்தேன் செய்தாள்நம் தாய்! ... 6

குடும்பம்
இன்பத்தைக் கொண்டோம்நாம் துன்பத்தைத் தூள்செய்தோம்
சென்மத்தில் கட்டுண்ணும் சேய். ... 7

செய்யுள்
கல்லுக்குள் நந்தெய்வம் கட்டுண்ணும் நம்செய்யுள்
சொல்லுக்குள் கட்டுண்ணும் சூழ். ... 8

தோட்டம்
பொன்வண்டார் தோட்டத்தில் பூந்தென்றல் கொண்டுள்ளம்
தன்னெண்ணம் விட்டுப்போம் சால். ... 9

காதல்
கண்ணுக்குள் பெண்வைத்தேன் கட்டுக்குள் கண்வைத்தேன்
புண்தந்தாள் நெஞ்சுக்குள் போர். ... 10

★★★★★

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/313098056087399/

சித்திரம் இல்லாத பற்பல 
.. மிறைக்கவி வகைகளில் ஒன்றான பிந்துமதி வெண்பா

இக்காலத்தில் ஒவ்வொரு அசையிலும் அடுத்தடுத்து 
.. ஒற்று வரும் தேமாங்காய்ச் சீர்களால் இயன்று 
.. ஒற்று வரும் நாள் வாய்பாட்டில் முடிகிறது.

முற்காலத்தில்
.. எகர ஒகரங்கள் தலையில் 
.. புள்ளிவைத்தே எழுதப் பட்டன.
.. இதனால் பிந்துமதிச் செய்யுள் தொன்மை வழக்கில்,  
.. எகர ஒகரங்களும் ஒற்றெழுத்துகளும் கலந்து வருவதாக, 
.. அதாவது வரும் எழுத்துகள் எல்லாம் 
.. ஒற்றெழுத்துகளாகச் செய்யப்பட்டன.

இந்தப் பயிலிழையில் நாம் பிந்துமதியின்
.. இன்றைய வழக்கில் குறள் வெண்பாக்கள் புனைவோம்.

***
இன்றைய வழக்கு பிந்துமதி வெண்பா விதிகள்
1. ஈற்றுச் சீர் தவிர்த்து அனித்தும் தேமாங்காய்ச் சீர்கள்.

2. தேமாங்காய்ச் சீர்களின் ஒவ்வோர் அசையும் 
.. ஒற்றெழுத்தில் முடியும் (பொன்வண்ணம் என்பதுபோல்).
.. இங்ஙனம் அடுத்தடுத்த எழுத்துகள் ஒற்றாக வரும்.

3. இரண்டு ஒற்றுகள் தொடர்ந்து வரலாலாது.
.. (கண்டாய்ந்தார், மண்பார்த்தாள் என்பனபோல்).

4. ஐகாரக் குறுக்கம் போன்றவற்றால் உச்சரிக்கப்படும்
.. ஒற்றுகள் வரலாகாது (கை (கய்) தந்தார் என்பதுபோல்)

5. காய்ச்சீர்களின் ஈற்றசை ஒற்று வரும் சீருடன் 
.. சந்தி சேரும்போது மறைந்துவிட லாகாது.
.. (என்னென்பேன் என்னுள்ளம் => என்னென்பே னென்னுள்ளம் என்று ஒற்று மறையும்).

6. மகரக் குறுக்கத்திலும் ஒற்று மறையும் வாய்ப்புண்டு.
.. (பொன்தேட்டம் மண்ணாக்கும் => பொன்தேட்ட மண்ணாக்கும் என்றாகும்.)

7. ஈற்றுச்சீரும் ஒற்றில் முடியும் 
.. நாள் வாய்பாட்டில் அமையும் (சொல், தேன் என்பனபோல்).

*****
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: மிறைக்கவிக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பக் குறளாக 
.. (பொழிப்பு மோனை கட்டாயம் இல்லை)
.. ஐந்து (5) இன்றைய வழக்கு பிந்துமதிக்
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

இன்றைய வழக்கு பிந்துமதி விதிகள் மேலே.

தொகுப்பு
பயிலிழை வெளியான நாள் முதல்
.. இரண்டு வாரங்கள் வரை வரும்
.. பதிவுகளில் தேர்வு பெற்றைவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

இறைவன்
எண்ணத்தில் நின்றாள்வார் துன்பத்தைக் கொண்டாள்வார்
கண்ணுக்குள் கால்வைத்தோம் காண். ... 1

கல்லுக்குள் மண்ணுக்குள் காட்டுக்குள் வீட்டுக்குள்
சொல்லுக்குள் நின்றாள்வார் யார்? ... 2

காளி
பொல்லாப்பெண் நின்றாள்வாள் துல்லம்செய் பெண்ணாள்காண்
தில்லம்கொள் தெய்வத்தாய் தேர். ... 3
[துல்லம் = பேரொலி, தில்லம் = காடு]

மின்சாரம்
மின்னல்கண் பொன்தேட்டில் மின்சத்தைக் கண்டுற்றார்
நன்றென்றோம் கொண்டாள்வோம் நாம். ... 4

[முன்னர் எழுதியது:
மின்னல்கண் பொன்தேட்டம் மின்சத்தைக் கண்டாய்ந்தார்
நன்றென்றோம் துய்த்தாள்வோம் நாம்.

கண்டாய்ந்தார், துய்த்தாள்வோம் => தொடர்ந்து இரு ஒற்றுகள் கூடாது;
பொன்தேட்டம் மின்சத்தைக் => மகரக் குறுக்கத்தில் ஒற்று மறையும்.]

செல்வம்
இக்கட்டில் திக்கற்றார் நெக்குண்டார் துன்புற்றார்
சிக்குண்டார் செல்வத்தின் சீர்! ... 5

சமையல்
உப்பென்றேன் சாம்பார்தான் கல்லென்றேன் சாப்பாட்டில்!
தப்பித்தேன் செய்தாள்நம் தாய்! ... 6

குடும்பம்
இன்பத்தைக் கொண்டோம்நாம் துன்பத்தைத் தூள்செய்தோம்
சென்மத்தில் கட்டுண்ணும் சேய். ... 7

செய்யுள்
கல்லுக்குள் நந்தெய்வம் கட்டுண்ணும் நம்செய்யுள்
சொல்லுக்குள் கட்டுண்ணும் சூழ். ... 8

தோட்டம்
பொன்வண்டார் தோட்டத்தில் பூந்தென்றல் கொண்டுள்ளம்
தன்னெண்ணம் விட்டுப்போம் சால். ... 9

காதல்
கண்ணுக்குள் பெண்வைத்தேன் கட்டுக்குள் கண்வைத்தேன்
புண்தந்தாள் நெஞ்சுக்குள் போர். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/332692777461260/
தொ.002. பாவலர் சீனி பழனி
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)

ஏழைக ளில்லினில் இல்லை இலக்கியங்கள்
ஆழி அதிஞானந் தான் . ... 1

ஏணியெண் திக்கினில் ஈகை யிருகைகள்
கேணி யிறைநீரோ கேள். ... 2

ஆற்றங் கரையில் அரிநெற் கதிர்களை
ஆற்றுஞ் செயலழ கே. ... 3

இசையினில் எண்டிசை யீகை யெதிரே
யிசைதலில் கச்சிடைக் கண். ... 4

ஏதிலி யீர்காள் எருதாய் இயக்குதற்
காதல் அனைத்தே அறன். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)

சர்பத்
கடைதன்னில் தண்டேன் கனிச்சா றிறக்க
நடையிற் செறிந்த நசை. ... 1

கழுதை
காள்காள் எனநால் கரங்கள் கதறலில்!
ஆளில்லாச் சாலை யனல்! ... 2
[கரம் = கழுதை]

சீட்டு
சீட்டாட்டக் கச்சேரித் திண்ணையினி யில்லையென்றாள்
கேட்ட கணத்தில் கிலி. ... 3

கன்னி
கன்னி கலியாணக் காலங் கடந்தனள்
தன்நிலை யானாள் தனி. ... 4

கதகளி
இதழியை யாதே யெழுதினாள் நெஞ்சில்
கதகளி யாட்டக் கனி. ... 5

★★★★★

பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/307552939975244/

சித்திரம் இல்லாத பற்பல 
.. மிறைக்கவி வகைகளில் ஒன்றான நிரோட்டியம்
.. பண்டை வழக்கில் நிரோட்டம், நிரோட்டகம், நிரோட்டியம்
.. என்னும் பெயர்களில் வழங்கப்பட்டு வந்தது.
.. இன்றைய வழக்கில் இதை இதழகல் என்பர்.

ஓஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உதடு என்று பொருள். 
.. நிரோஷ்டம் என்றால் உதடு ஒட்டாமலோ, குவியாமலோ வருவது. 
.. இவ்வாறு இதழ்கள் ஒட்டாமல், குவியாமல் வரும்
.. எழுத்துகள் அமையப் பாடுவது நிரோட்டியம் 
.. எனப்படும் சொற்றிற மிறைக்கவி வகையாகும்.

உஊஒஓ ஔபம வ‍இவற் றியைபு
சேரா நிரோட்டத் திறத்து.
--என்பது தண்டியலங்கார நூற்பா.

அதாவது, நிரோட்டியத்தில்
.. கீழ்க்காணும் எழுத்துகள் வருதல் கூடா.
..
.. 005 உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்கள்
.. 003 ப்,ம்,வ் மெய்கள்
.. 036 ப,ம,வ உயிரெழுத்து வருக்கம்
.. 075 ப்,ம்,வ் நீக்கி மீதம் 15 மெய்கள்  உ,ஊ,ஒ,ஓ,ஔ
.. ----------
.. 119 ஆகும் மொத்த எழுத்துகள்
.. ----------

நிரோட்டியம் இலக்கியச் சான்று
(நேரிசை வெண்பா)

சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங்
கச்சிக்கச் சாலைக் கனி.
--தண்டியலங்காரம்

***
திருக்குறள் நிரோட்டியச் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். ... 341

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல். ... 489

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: மிறைக்கவிக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. ஐந்து (5) நிரோட்டிய (இதழகல்)
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
12/10/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****

அடியேன் பங்காக
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)

சர்பத்
கடைதன்னில் தண்டேன் கனிச்சா றிறக்க
நடையிற் செறிந்த நசை. ... 1

கழுதை
காள்காள் எனநால் கரங்கள் கதறலில்!
ஆளில்லாச் சாலை யனல்! ... 2
[கரம் = கழுதை]

சீட்டு
சீட்டாட்டக் கச்சேரித் திண்ணையினி யில்லையென்றாள்
கேட்ட கணத்தில் கிலி. ... 3

கன்னி
கன்னி கலியாணக் காலங் கடந்தனள்
தன்நிலை யானாள் தனி. ... 4

கதகளி
இதழியை யாதே யெழுதினாள் நெஞ்சில்
கதகளி யாட்டக் கனி. ... 5

--குருநாதன் ரமணி

★★★★★

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/328981151165756/
கவிஞர் திசேசு
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

வாராதே பின்னால் வனிதைதன் முந்தானை
கூறும் வலமிடம சைந்து. ... 1

சாலையைச் சீராக்க வீசுவாள் தேய்த்தபடி
காளையர் பேருந்தில் காண். ... 2

அயல்நாடு செல்லுதோ ஐம்பொற் சிலைகள்
கயமைக்கு ஈந்ததால் காப்பு. ... 3

ஆற்றுமணல் அள்ளுகிறார் ஆழப் படுத்துவதற்கு
தூற்றுவது ஞாயமா சொல். ... 4

பிறப்பு மிறப்புமிங்கு பேருலகில் ஒன்றாம்
சிறப்பிதைக்காட் டுஞ்செங் கதிர். ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

கூப்பிய கைகளாய் கோபுரங்கள் நிற்குமெழில்
காப்பில் வாழும் கலை. ... 6

குருபலன் வேண்டியே கொன்றையும் பூக்க
மரமெலாம் மஞ்சள் மலர். ... 7

தோட்டத்துப் பூவெல்லாம் தோகை முகங்காண
கூட்டமாய் நிற்கும் மலர்ந்து. ... 8

கண்ணின் படபடப்பு காரிகை காட்டுகின்ற
வண்ணவர வேற்பு மடல். ... 9

குழற்கற்றை காதோரம் கொஞ்சிநிதம் பேசும்
அழகுமயில் வாழ்வே அவன். ... 10

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
பெயர்பொருள் தற்கூறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

மாலைக் கதிரின் மயக்கமேன் வாள்மங்கை
வாலைக் குமரி நகை. ... 1

பார்வையில் பொங்கிடும் பாரியாள் கண்ணீரைக்
கார்முகில் கண்டு திகைப்பு. ... 2

காலில் சகடம்தான் கட்டினாற்போல் ஓட்டமேன்?
வேலிதாண்ட விண்ணப்ப மோ! ... 3

வேலையின்றிச் சுற்றிவரும் வீணோரை எள்ளுமே
நூலை அரித்திடும் செல். ... 4

சில்லென வீசிடும் தென்றல் உணர்த்திடும்
மெல்லிய லாள்ஸ்பரி சம். ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்ற அணி
(குறள் வெண்பா)

மழலைச் சிரிப்பில் மகிழ்விக்கும் மற்றோர் 
குழவியாய்ப் பூச்சர மே. ... 6

மனிதன் சுரண்டும் மலைதனைப் பார்த்து
தனியே நகைக்கும் எலி. ... 7

அலைவர நாணி அமிழ்ந்தெழும் நாணல்
தலைப்பவிழ நாணாநங் கை. ... 8

உழலும் மனதை உறவும் ஒதுக்க
நிழல்தேடி வாடும் சவுக்கு. ... 9

என்றும் தளர்வுறா என்மனம் என்வீடோ
இன்பதுன்பில் போன திடிந் து. ... 10

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையும் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

அல்லியைக் கண்ட அழுக்காற்றில் வெண்மதி-மங்
குல்பின் மறைந்தொளியும் கூத்து! ... 1

மழலை விழிக்க மனமகிழ்செஞ் சோதி
தழுவும் கரங்கள் தளிர். ... 2

காற்றைத் துரத்தும் கடிமலர் வண்டொன்று
சேற்றில் நனையும் சிறிது! ... 3

நெற்களப் பொற்குவியல் நீள்பிரி யாய்வைக்கோல்
பொற்கரம் தூற்றும் பொலிவு. ... 4

வான்மலர் சோதி வழியிலோர் மேகம்பின்
தான்மறையும் கொஞ்சம் தளர்ந்து. ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையாப் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

மரங்கள்தம் கையேந்தி வான்மழை வேண்டும்
பெருமூச்சில் வானின் பெயல். ... 6

கொடியிடை பூக்கள் குரல்கொடுக்க வந்தே
துடியிடை ஆட்டும் சுரும்பு. ... 7

சன்னலொன்று கண்விழிக்கச் சட்டெனக் கண்பட்ட
கன்னிமுகம் உள்ளக் களிப்பு. ... 8

பனிப்போர்வை யில்தூங்கும் பட்டணத்து வீடு
தனியாய் விழித்திருக்கும் நாய். ... 9

பொன்னிற மாலைப் பொலிவினில் கோபுரம்
நின்றெழில் காணும் நிழல். ... 10

★★★★★

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/302573873806484/

தற்குறிப்பேற்ற அணி
(பிற பெயர்கள்: தற்குறிப்பேற்றணி)
இயல்பாக நிகழும் ஒன்றன்மேல் 
.. கவிஞர் தம் கற்பனையால் 
.. ஒரு காரணத்தைக் கூறி 
.. (இவ்வாறு தன் குறிப்பை அதன்மேல் ஏற்றிப்)
.. படிப்போர் மனத்தில் தாம் விரும்பும்
.. உணர்வைக் கிளர்ந்தெழச் செய்வது
.. தற்குறிப்பேற்ற அணி.

தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி 
.. இவை மூன்றும் எவ்வகையில் ஒன்றுக்கொன்று 
.. வேறுபட்டு நிற்பன என்றறிதல் முக்கியம்.

மங்கை வந்தாள் மலர்கள் அசைந்தன => தற்குறிப்பேற்றம் 
.. பொதுவான நிகழ்வின்மேல் தற்குறிப்பை ஏற்றிச் சொல்வது.

குதிரையின் கொம்பால் குவிகனி கொய்தாள் => இல்பொருள் உவமை
.. கனி பறிக்கும் துறட்டுக்கோலை இல்லாத பொருளான
.. குதிரைக் கொம்பிற்கு உவமையாக்கியது.

கொய்தனள் விண்மீன்கள் குடலையில் சேர்த்தனள் => உயர்வு நவிற்சி
.. பூக்களை விண்மீன்களாக உயர்த்தி
.. அவற்றைக் கொய்ததாகச் சொல்லும் வியப்பு.

தண்டியலங்கார சூத்திரம்

தண்டியலங்காரம் தற்குறிப்பேற்றணியை இவ்வாறு வரையறுக்கிறது.

பெயர்பொருள் அல்பொருள் எனவிரு பொருளிலும்
இயல்பின் விளைதிற னன்றி அயலொன்று
தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்.

மேற்கண்ட சூத்திரம் இவ்வணியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது.
.. பெயர்பொருள் (அசையும் பொருள்) தற்குறிப்பேற்றம்
.. அல்பொருள் (பெயராப் பொருள், அசையாப் பொருள்) தற்குறிப்பேற்றம்.

பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி சான்று
(குறள் வெண்பா)

தாகத்தால் சோதி தடாகநீர் உள்ளிழுக்க
மேகமுரு வானது வே!
[சோதி = சூரியன், பெயரும் பொருள்]

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி சான்று
(குறள் வெண்பா)

மலைக்கார் மகளவள் மார்பணி யாக
அலைவீழ் அருவி அழகு.
[மலை = அசையாப் பொருள்]

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாகப்
.. பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி அமைவதாக
.. ஐந்து (5) குறள் வெண்பாக்களும்
.. பெயராப் பொருள் தற்குறிப்பேற்றணி அமைவதாக
.. ஐந்து (5) குறள் வெண்பாக்களும்
.. ஆக மொத்தம்
.. பத்து (10) குறள் வெண்பாக்கள்
.. புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
பெயர்பொருள் (அசையும் பொருள்), 
.. பெயராப் பொருள் (அசையாப் பொருள்)
.. பற்றிய விளக்கமும் சான்றுகளும் மேலே.

தொகுப்பு
28/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையும் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

அல்லியைக் கண்ட அழுக்காற்றில் வெண்மதி-மங்
குல்பின் மறைந்தொளியும் கூத்து! ... 1

மழலை விழிக்க மனமகிழ்செஞ் சோதி
தழுவும் கரங்கள் தளிர். ... 2

காற்றைத் துரத்தும் கடிமலர் வண்டொன்று
சேற்றில் நனையும் சிறிது! ... 3

நெற்களப் பொற்குவியல் நீள்பிரி யாய்வைக்கோல்
பொற்கரம் தூற்றும் பொலிவு. ... 4

வான்மலர் சோதி வழியிலோர் மேகம்பின்
தான்மறையும் கொஞ்சம் தளர்ந்து. ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையாப் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

மரங்கள்தம் கையேந்தி வான்மழை வேண்டும்
பெருமூச்சில் வானின் பெயல். ... 6

கொடியிடை பூக்கள் குரல்கொடுக்க வந்தே
துடியிடை ஆட்டும் சுரும்பு. ... 7

சன்னலொன்று கண்விழிக்கச் சட்டெனக் கண்பட்ட
கன்னிமுகம் உள்ளக் களிப்பு. ... 8

பனிப்போர்வை யில்தூங்கும் பட்டணத்து வீடு
தனியாய் விழித்திருக்கும் நாய். ... 9

பொன்னிற மாலைப் பொலிவினில் கோபுரம்
நின்றெழில் காணும் நிழல். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★