Wednesday, October 3, 2018

பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/212437962820076/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 70)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => ஓரடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 1 => ஒவ்வொரு எழுத்தந்தாதிக்கும்
 2 => ஒவ்வொரு அசையந்தாதிக்கும்
 5 => ஒவ்வொரு சீரந்தாதிக்கும்
10 => அந்தாதி மாலைக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

அந்தாதிச் செய்யுள்:
பின்னால் வரும் செய்யுளின் முதற்சீர் தொடக்கமாக
.. முன்னால் வந்த செய்யுளின் ஈற்றில் அமையும்
.. சீர் முழுதும் அமைவது சீரந்தாதி
.. ஈற்றசை மட்டும் அமைவது அசையந்தாதி
.. ஈற்றெழுத்து மட்டும் அமைவது எழுத்தந்தாதி.

சான்றாக, முன்வரும் செய்யுளின் ஈற்றில்
.. அவிர்மதி என்ற சீர் இருந்தால்
.. வரும் செய்யுளின் முதற்சீர் 
.. திறமுடன் என்றாலது எழுத்தந்தாதி
.. மதிநலன் என்றால் அசையந்தாதி
.. அவிர்மதி என்று முழுதும் வந்தால் சீரந்தாதி.

அந்தாதி மாலையில்
.. முதற்செய்யுளின் முதற்சீர்
.. இறுதிச் செய்யுளின் ஈற்றுச் சீருடன்
.. சீர்முழுதுமோ, அசைமட்டுமோ
.. அந்தாதித் தொடை வகையில் 
.. ஒரு மாலையின் மலர்கள்போல் 
.. கட்டப்பட்டுத் தொடர்ந்து அமையும்.
.. சீர் முழுதும் அமைந்து மாலையாதல் சிறப்பு.

அந்தாதிச் சரம்
.. மாலையாக அமையாத 
.. அந்தாதிச் செய்யுள் தொடரை
.. அந்தாதிச் சரம் எனலாம்.

பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா அந்தாதி மாலை

விரும்பிய பாடுபொருளில்
.. சீர்/அசை/எழுத்து அந்தாதித் தொடையும் 
.. ஒரு விகற்பமும், பொழிப்பு மோனையும் பயில
.. 5 குறள் வெண்பாக்கள் புனைவோம்.

அந்தாதி மாலை
.. முதற் செய்யுளின் முதற் சீரும்
.. இறுதிச் செய்யுளின் ஈற்றுச் சீரும்
.. சீர்/அசை வகையில் அந்தாதியாகக் கட்டி 
.. அந்தாதி மாலை செய்வோம்.

தொகுப்பு
11/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
வாணாள் முழுதும் தமிழ் கற்போம்!
(குறள் வெண்பா அந்தாதி மாலை)
(தமிழ்: மொழி வளர்ச்சி)

தமிழுரை யாடல் தமிழ்மொழி வீட்டில்
தமிழில் நினைப்பெனில் சால்பு. ... 1

சால்புறு மாந்தர் தமிழ்மொழி யிற்செய்த 
நூல்பயிலக் கொள்வோம் நுனிப்பு. ... 2

நுனிப்புல்லை மேயாது நுண்மை விரிப்போர்
தனிநின்றே ஆய்வர் தமிழ். ... 3

தமிழில் சிறுவர் சகலமும் கற்க
அமைபாடத் திட்டம் அணி. ... 4

அணிவோம் தமிழை அகத்தில் புறத்தில்
தணிபுன லாம்நம் தமிழ். ... 5

[சால்பு = மேன்மை, சான்றாண்மை; நுனிப்பு = கூர்ந்தறிகை]

--குருநாதன் ரமணி, 02/05/2018

★★★★★

No comments:

Post a Comment