சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/221292071934665/
01. பா.040. செல்லப்பன் (88888 68/70)
வள்ளுவர் தந்த வளமார் திருக்குறளே
உள்ளிருள் நீக்கும் ஒளி. ... 1
ஒளியால் இருளொழியும், ஓங்கும் அறிவின்
தெளிவால் நலம்பொழியும் தேர். ... 2
தேர்ந்துசெயும் எச்செயலும் தீங்கின்றி வெற்றிபெறும்
சோர்ந்து விடாதே துணி. ... 3
துணிவே துணையாய்த் தொடங்கும் தொழிலால்
அணியணியாய் நல்வளங்கள் அள்ளு. ... 4
நல்வளங்கள் அள்ளியபின் நல்லறங்கள் செய்தால்தான்
உள்ளின்பென் றார்வள் ளுவர். ... 5
★★★
02. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (77777 67/70)
சேர்ந்து பணியினைச் செய்திட வேண்டுமே
சோர்ந்த வயிற்றிற்குச் சோறு. ... 1
சோறுமட்டும் போதுமோ சுள்ளெனக் காரமாய்நா
ஊறும் குழம்புதான் ஒன்று. ... 2
ஒன்றுபோது மென்றே உரைத்தது தப்புதான்
நன்றாய்த்தான் கூட்டுகேட்கும் நா. ... 3
நாவிற் கினியதாய் நாலு பொறியலும்
பாவிக் கடங்காப் பசி. ... 4
பசியென்று ஏனோ பறக்கின்றாய் பாவி
புசித்திட வேண்டுமொன்றாய்ச் சேர்ந்து. ... 5
★★★
03. தொ.002. பாவலர் சீனி பழனி (77777 60/70)
நிழலின் அருமை வெயிலில் உணர
பழசுவை நீரொடு நேர்! ... 1
நேர்நடை மாக்கள் நிமிர்நடை வாழ்வியல்
பாரினில் பால்பசு மாடு. ... 2
மாடு மனைகள் மருவும் குடியினில்
கூடும் உழைப்பில் உயர்வு. ... 3
உயர்வே உடையும் ஒளிதரு எண்ணம்
பயிர்விளை வேளாண் பரிசு. ... 4
பரிசென வாழ்வு பலனோ விருந்து
முரசதிர் வெற்றி மகிழ்! ... 5
★★★
நி1. குருநாதன் ரமணி
தமிழுரை யாடல் தமிழ்மொழி வீட்டில்
தமிழில் நினைவெனில் சால்பு. ... 1
சால்புறு மாந்தர் தமிழ்மொழி யிற்செய்த
நூல்பயிலக் கொள்வோம் நுனிப்பு. ... 2
நுனிப்புல்லை மேயாது நுண்மை விரிப்போர்
தனிநின்றே ஆய்வர் தமிழ். ... 3
தமிழில் சிறுவர் சகலமும் கற்க
அமைபாடத் திட்டம் அணி. ... 4
அணிவோம் தமிழை அகத்தில் புறத்தில்
தணிபுன லாம்நம் தமிழ். ... 5
[சால்பு = மேன்மை, சான்றாண்மை; நுனிப்பு = கூர்ந்தறிகை]
★★★★★
No comments:
Post a Comment