சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.10. இயைபுக் குறள்
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/240388460025026/(சீர்கள் 4-3 என்றோ, 3-3 என்றோ இயைபு வரப் பாடும் குறள் வெண்பா)
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். நினைவிற் கொணர வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா விண்டறும் ஈறடி யில். ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை வரும்குறட் பாவே வளம். விளக்கம் இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப. --யாப்பருங்கல விருத்தி அதாவுது, இயைபுத் தொடையில் .. இரண்டு அடிகளின் ஈற்றெழுத்தோ .. அவ்வெழுத்துள்ள அசையோ .. அவ்வசையுள்ள சீரோ .. அச்சீருள்ள சொல்லோ .. ஒன்றுக்கொன்று ஒப்ப அமையலாம். இயைபுக் குறளைப் பொறுத்தவரை .. இரண்டு அடிகளின் ஈற்றுச் சீரமையும் .. சொற்கள் ஒப்பவரும் இயைபுகளையே கொள்வோம். ஒப்புதல் என்றால் .. மெய்யெழுத்துகள் அவையே என்றோ .. அல்லது தம்முள் ஒலியொத்தோ அமைய .. அவற்றின் மேல் அதே அல்லது ஒலியொத்த .. உயிரேறியதாக அமைதல் வேண்டும். சான்றுகள்: .. அடகு-படகு, சாக்கு-வாக்கு => அதே ஒற்று, அதே உயிர் .. அரும்பு-குறும்பு, பேச்சு-போச்சு => அதே ஒற்று, ஒலியொத்த உயிர் .. கன்று-வந்து, கட்டை-கற்றை, வள்ளி-சொல்லி => ஒலியொத்த உயிர், ஒற்று .. மழலை-குவளை, கடமை-உடமை => ஒலியொத்த உயிர்கள் பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் பாடுபொருள்: கவிஞர் விருப்பம் பாவகை: குறள் வெண்பா வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா விரும்பிய பாடுபொருளில் .. முதலடி நான்காம் சீர் => இரண்டாமடி மூன்றாம் சீரில் என்றோ .. இரண்டு அடிகளிலும் மூன்றாம் சீரில் என்றோ .. சொல்லியைபுகள் அமைவதாகவும் .. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும், .. முதலடியில் பொழிப்பு அல்லது ஒரூஉ மோனை அமையுமாறும் .. குறைந்தது 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் புனைந்து .. மேற்சொன்ன இரு வகைகளாகப் பிரித்து எழுதுவோம். .. ஒருவர் பத்து குறட்பாக்கள் வரை எழுதலாம். குறிப்பு: சீர்கள் 4-3 இயைபென்றால் .. முதலடியில் சீர்கள் 1-3-இல் பொழிப்பு மோனை அமையும் .. ஈற்றில் வரும் இயைபுச் சொல் காசு, பிறப்பு வாய்பாடாவதால், .. குறள் நிரையசையில் தொடங்கும். சீர்கள் 3-3 இயைபென்றால் .. முதலடியில் சீர்கள் 1-4-இல் அமையும் ஒரூஉ மோனை .. ஈற்றயற்சீர் இயைபு ஈரசையாகும் .. குறள் நேரசையிலோ நிரையசையிலோ தொடங்கும். .. இவ்வகைகளைச் சான்றுக் குறட்பாக்களில் காண்க. தொகுப்பு 06/07/2018 (வெள்ளி) இரவு வரை .. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை .. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் .. பின்னர் வெளியிடப்படும். *** அடியேன் பங்காக குறட்பா வித்தகம்: இயைபுக் குறள் (குறள் வெண்பா) (சீர்கள் 4-3 இயைபு) பணம்சேர்த்து வந்த பகட்டான வாழ்வு குணமுயர வில்லையெனில் தாழ்வு! ... 1 கடவுளாய்க் கற்சிலை கண்டால் வெறுப்பு? கடந்தீரோ எல்லை, செருப்பு! ... 2 மதுரம் தமிழென்று வால்மீகி வாக்கு நிதம்பயிலா தேதேதோ சாக்கு! ... 3 மழலை மிழற்றி மடியமரப் பேச்சு கழலும் மனமெங்கோ போச்சு! ... 4 கழலிணை போற்றியே கண்ணனுருத் தொட்டு வழுத்தினேன் என்மனம் விட்டு! ... 5 துளிர்விடும் காய்மலர்த் தோட்டமென் வீடு நளிவுறும் ஓய்விலென் நாடு. ... 6 *** (சீர்கள் 3-3 இயைபு) நறும்பூவில் தும்பி அரும்பு நளியும் எறும்பூர்ந்து ஓட்டும் குறும்பு! ... 7 வண்ணத்துப் பூச்சி அமர்ந்து மலர்தேடும் எண்ணமதை யின்றும் சுமந்து! ... 8 கன்னியவள் கண்விழிப் பூமலர்ந்து புன்னகைத்தாள் என்னுள்ளம் தேன்பா மலர்ந்து! ... 9 நிலவியே எங்கும் நிறைந்து பிரம்மம் பலவுரு கொள்ளும் குறைந்து. ... 10 --குருநாதன் ரமணி ★★★★★
No comments:
Post a Comment