Thursday, December 13, 2018

பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/257382558325616/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. முதலடியில், ஈற்றடியில் என்று
.. கீழ்க்காணும் பழமொழிகளை அமைத்தே
.. பழமொழி இல்லாத அடியில் பொழிப்பு மோனை முயன்றே
.. ஒருவிகற்பக் குறள் வெண்பாக்கள் புனைவோம்.

முதலடிப் பழமொழிக்கு ஐந்தும்
.. ஈற்றடிப் பழமொழிக்கு ஐந்து
.. என்று மொத்தம் பத்து (10)
.. குறட்பாக்கள் புனைவோம்.

தொகுப்பு
27/07/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
பழமொழிகள்
முதலடிப் பழமொழி

அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
அடிக்கசாகப் பந்துவிசை கொள்ளும்
அடிமே லடியடித்தால் அம்மி நகரும்
இளமையிற் சோம்பல் முதுமையில் வறுமை
உழுவோன் கணக்கில் உலக்கைமிஞ் சாது
எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
எடுப்பது பிச்சையாம் ஏறுவதோ பல்லாக்கு
எழுதாக் கடனுக் கழுகை தீர்வா?
எள்ளெனும் முன்னவன் எண்ணெயாய் நின்றனன்
ஒப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
ஒருமொழியாள் ஊமை பலமொழியாள் வித்வான்
கல்விக் கொருவர் களவுக் கிருவர்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்
குதிரைகுணம் கண்டே கொம்புதர வில்லை
சாகத் துணிந்தால் சமுத்திரம் நீச்சாகும்
சீரங்கக் காகமெனில் கோவிந்தம் பாடுமா?
தமிழுக் கிருவர் தவத்துக் கொருவர்
தலையில் இடிபட்டால் தாழக் குனிவான்
நாட்டுக்கு நல்லதுரை தோட்டிக்குப் புல்சுமை
நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
பட்டனத்து வாசல் படலால் மூடுவதோ?
பணக்காரன் பைத்தியம் பத்துப்பேர் பின்னே!
பலசரக்குக் காரனொரு பைத்தியம் ஆனதுபோல்
பாதகர் நட்பெனில் பாம்பொடு நட்புபோல்
பாய்மரம் இல்லா மரக்கலம் போல
பாரா உடைமைகள் பாழா வதுபோல
பார்க்கும் விழியினும் கேள்செவி பொல்லாதாம்
பாலொடு சேர்ந்தநீர் பாலாய்த் தெரிவதுபோல்
பேசா திருந்தால் பிழையேதும் இல்லைபோல்
மணல்மேல் விழுந்த மழைத்துளி போலே
மனத்தில் பகையாம் உதட்டில் உறவு
முடிக்கா தவனே படிக்கா தவனாம்
மொழிதவ றாதான் வழிதவ றாதான்
வலியவன் வெட்டியதே வாய்க்கால்
வல்லவன் பம்பரம் ஆடும் மணலிலும்
வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்

***
ஈற்றடிப் பழமொழி

ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
அஞ்சுவார்க் கில்லை யரண்.
செருப்பிடைப் பட்ட பரல்.
இன்சொல் இடர்ப்படுப்ப தில்.
இருதலைக் கொள்ளியென் பார்.
கூன்மேல் எழுந்த குரு.
கணையினுங் கூரியவாம் கண்.
கற்றேயும் தேயாது சொல்.
கற்றலிற் கேட்டலே நன்று.
மகனறிவு தந்தை அறிவு.
முள்ளினால் முட்களையு மாறு.
பாம்பறியும் பாம்பின் கால்.
பனியால் குளம்நிறைதல் இல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
தாய்மிதித் தாகா முடம்.
தட்டாமல் செல்லாது உளி.
தமக்கு மருத்துவர் தாம்.
தனிமரம் தோப்பாவ தில்.
திருவினும் திட்பம் பெறும்.
திங்களை நாய்குறைத் தற்று.
உரைத்தாலும் தோன்றா துணர்வு.
யானைபோய் வால்போகா வாறு.
நரகர்கட் கில்லையோ நஞ்சு?
நிறகுடம் நீர்தளும் பாது.
நுணலும்தன் வாயால் கெடும்.
பட்டவர்க் குண்டு பலன்.
மனநோயாம் இல்லை மருந்து.
மொட்டைத் தலையினில் பேன்.

***
அடியேன் பங்காக
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
பசையில்லா விட்டாலோ பாடு. ... 1

அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
அடிகோலும் மேன்மையுற வாம். ... 2

கிழவியும் காதம் குதிரையும் காதம்
உழவனின் வேதம் உழல்வு. ... 3

நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
நாவுரைத்துப் பார்த்தே நவில். ... 4

வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
வல்லமை தேர்தலில் வாக்கு. ... 5

ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

சாயிராம் பேர்சொன்னால் சன்மவினை கள்பறக்கும்
ஆயிரம் காக்கைக்கோர் கல். ... 6

துணையிருப்பாய் தேவியே துர்க்கையே உன்றன்
கணையினுங் கூரியவாம் கண்! ... 7

இருப்பில்லை ஏதோ எழுதுவானென் போர்சொல்
செருப்பிடைப் பட்ட பரல். ... 8

அருவுரு வாளன் அரன்பேர்கொள் நெஞ்சு 
திருவினும் திட்பம் பெறும். ... 9

கட்டுண்டோம் காத்திருப்போம் காலங்கள் மாறுவன
பட்டவர்க் குண்டு பலன். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment